மாலைப் பொழுதின் மயக்கதிலே – விமர்சனம்

ஒரு மாலைப் பொழுதில், ஒரு காபி ஷாப்பில் நடக்கும் கதை தான் ‘மாலைப் பொழுதின் மயக்கதிலே’ படம். இது போன்ற ஒரு நாள் நடக்கும் கதைகள் பொதுவாக திகில் படமாகவும் அல்லது துப்பரியும் கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும். ஆனால், இப்படம் அப்படி இல்லாமல் காதலையும், காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடியினருக்கு இடையே ஏன் பிரிவு ஏற்படுகிறது என்பதையும் விவரித்திருக்கிறது.

ஒரே ஒரு லொக்கேஷனில், ஒரு குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துகொண்டு இப்படிப்பட்ட படம் எடுத்திருக்கும் இயக்குநர் நாராயண நாகேந்திர ராவை விட, இந்த படத்தை தயாரித்திருக்கும் சி.எச்.மயூri சேகரின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும்.

உதவி இயக்குநரான நாயகன் ஆரி, படம் எடுப்பதற்காக தயாரிப்பாளர்களை தேடி அலைய, அந்த சமயத்தில் அவருடைய நண்பர் ஒருவரின் மூலம் நம்ம பவர் ஸ்டார் போன்ற ஒரு பார்ட்டி அறிமுகமாகிறார். அவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை வாங்கி கொடுக்கும் ஆரியின் நண்பர், உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்கிறோம் என்று கூறி விடுகிறார். இதை அறியாத ஆரி, வேறு ஒருவரை வைத்து படம் எடுக்க, அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு, அதற்கு ஒரு குறிப்பிட்ட கெடுவையும் கொடுக்கிறார் நம்ம பவர் ஸ்டார் பார்ட்டி. பணத்தை திருப்பி கொடுக்க முடியாத ஆரி, மனம் நொந்துப் போய் படம் பார்க்க தியேட்டருக்கு போக, அங்கே டிக்கெட் கிடைக்காமல் ஒரு காபி ஷாப்பிற்கு போகிறார். அங்கே தான் நாயகி சுபாவும் காபி குடிக்க வருகிறார். இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டு பேசிகொண்டிருக்க, அதே காபி ஷாப்பில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலாஜி-தேஜஸ்வினி ஜோடியும் வருகிறார்கள்.

ஆரி, சுபா மீது காதல் வயப்பட்டு அவரை ஒரு தலையாக காதலிக்க, அதே சமயத்தில் பாலாஜியும், தேஜஸ்வினியும் மோதிக்கொள்கிறார்கள். அதே சமயத்தில் ஆரி, கற்பனையில் டூயட், சோகம் என அனைத்தையும் ஓடவிட்டு பிறகு தனது காதலை சுபாவிடம் சொல்ல, அவரோ தனக்கு காதலில் விருப்பம் இல்லை. நான் மேல் படிப்பிற்காக வெளிநாடு போகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சண்டைப் போட்டு கொண்டிருந்த பாலாஜியும்-தேஜஸ்வினியும் விவாகரத்து செய்யும் அளவுக்கு வருகிறார்கள்.

இப்படி நகரும் படத்தில் ஆரியின் காதலை சுபா ஏற்றாரா? பாலாஜியும், தேஜஸ்வினியும் தங்களை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஆரி, சுபா, பாலாஜி, தேஜஸ்வினி, காபி ஷாப்பின் மேனஜர் பஞ்சுசுப்பு, சிவாஜி, காப்பி ஷாப்பின் வேலை ஆட்கள் இரண்டு பேர் என இந்த கதாபாத்திரங்கள் தான் படம் முழுவதும் வருகிறார்கள். இவர்களை வைத்துகொண்டு மேலே சொன்ன ஒரு கான்சப்ட்டில் படம் என்றால் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கிட்டதட்ட ஆமையை விட குறைவான வேகத்தில் செல்லும் படம் என்று சொல்லலாம். (அப்படி இருப்பதால் தானே இரண்டு மணி நேரம் கதையை நகர்த்த முடிந்திருக்கிறது) ஆரியும், சுபாவும் சிரிப்பது, பார்ப்பது என்று அதையே படத்தின் பெரிய ட்விஸ்ட்டாக இயக்குநர் வைத்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் ஆரியின் உடல் மொழி, சிரிப்பு, வசன உச்சரிப்பு போன்றவை நன்றாக இருக்கிறது. ஹீரோயின் சுபாவும் தனது பங்கிற்கு நன்றாகவே சிரித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு பளிச் பளிச்சென்று கண்ணை கவருகிறது. அச்சுவின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகம் தான்.

சில இடங்களில் நம்மை சிரிக்கவும், வசனங்களின் மூலம் சிந்திக்கவும் வைக்கும் இயக்குநர், பெரும்பாலான இடங்களில் காட்சிகளின் மூலம் சோம்பல் முரிக்கவும் வைக்கிறார்.

நம்ம ரசிகர்கள் பாடல் காட்சிகளில் தான் டம்மடிக்க வெளியே எழுந்து போவார்கள். ஆனால், இயக்குநர் நாராயண் அவர்கள் காட்சிகளின் போதே டம்மடிக்க எழுந்து போக வைத்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது.

Filed Under: சினி விமர்சனம்தமிழ்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English