வைத்தியர் சங்கர் பைத்தியரே – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பல்லவன்-

அரசியல் வாதிகளாலும் பிரமுகர்களாலும் கண்டு கொள்ளப்படாது சிறையில் வாடும் வைத்தியர் சிவசங்கரின் விடுதலையை வேண்டி நிற்கும் உண்மையான தமிழ் மக்களின் குரல்களில் இதுவும் ஒன்று.

ஆ.ர்

இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று முரண்பட்டார் எனவைத்தியர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் தடுப்புக்காவல் உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வைத்தியர்சங்கர் வித்தியாசமான மனிதர். அவரோடு பழகியவர்களுக்கு அவரது சிந்தனைகள் மற்றையவர்களைக் காட்டிலும் வேறானது என்பது தெரிந்திருக்கும்.

 

நிர்வாணிகள் உலகில் கோவணம் கட்டியவன் முட்டாள் என்பார்கள். அடக்குமுறையையும் அடிமைத் தனத்தையும் ஏற்றுக் கொண்டவர்களின் உலகில் நியாயம் பேசுபவனை குறிப்பாக இலங்கையில் பயித்தியக்காரன் என்பார்கள். “எழுது இவன் நெற்றியில் பயித்தியக்காரன்” என்று யார்கேட்டார்? போத்தித்த  கடாமார்பில் ஏன் பாய்ந்தது. வலி சிவ சங்கருக்கு.

 

உண்மையில் சங்கர் பைத்தியக்காரர்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கத் தெரியாத பயித்தியக்காரன்.

 

தன்நலத்தைமட்டும் கருத்தாகக் கொண்ட எங்கள் தமிழ் சமூகத்தில் சமுதாயச் சிந்தனையைச் சதா சிந்திக்கின்ற சங்கர் போன்ற சிலமனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.அவ்வாறான சிலரை எஞ்சியிருக்கின்ற அதிபுத்திசாலிகள், ‘ஒருமாதிரியானஆள்’ ‘தன்போக்கு’ (one way) ’கொஞ்சம் பிரச்சனை’ என்ற பதங்களின் அடிப்படையில் அடையாளப் படுத்துகின்றார்கள். அதையும் தாண்டி அதிகம்படித்தவர்கள் எனும் மட்டைகளைத் தம்வசம் கொண்டிருக்கும் அதிமேதாவிகள் தமக்குத் தெரிந்த தமது துறை சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி அந்தமேனியா இந்தமேனியா என்றெல்லாம் விளக்கமளிப்பார்கள். பின்னர் இந்தச்சொற்கள் மக்களுக்குப் புரியாதென்னச் சொல்லி மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதற்காகக் கடைசியில் பைத்தியக்காரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என இத்தகைய மனிதர்களுக்கு முத்திரைகுத்தி விடுகின்றார்கள்.இதுதான் வைத்தியர் சிவசங்கரின் சம்பவத்திலும் நடந்திருக்கின்றது.

 

வைத்தியர் சங்கர் பலராலும் குறிப்பாக ஏழை மக்களினாலும் இளைஞர்களினாலும் அதிகம் அறியப்பட்ட மனிதர். ஆன்மீக நாட்டம் அதிகம்மிக்கவர். சமூக அக்கறை அதிகம் கொண்டவர். நேர்மையானவர். தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டடையும் மாற்றி எதற்காகவும் சோரம் போகாதவர். அண்மையில் நடைபெற்ற அவரது அனுராதபுரத்துக்கான மாற்றம் கூட வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்களத்தில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய போது ஆளுனர் சந்திரசிறியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாகவே ஏற்பட்டது. ஆளுனர்“இம்”என்றாலே சலம் கழிய எழும்பி நிற்கும் எங்கள் அதிகாரிகள் மத்தியில் நியாயத்திற்காக ஆளுனருடன் முரண்பட்ட சங்கர் உண்மையில் பைத்தியக்காரர்தான்.  ஊரோடு ஒத்து ஓடத் தெரியாத மனிதர்.

 

இன்றைக்கு யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பக்கங்களை அடிக்கடி நிரப்பும் செய்திகள் அங்காங்கு பாடசாலைகள் கட்சி அலுவலகங்கள் பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றில் நடைபெறும் இரத்தததான முகாம்கள் பற்றிய விடயங்களும் புகைப்படங்களும் அடங்கிய செய்திகள்தான். குருதிக் கொடையாளர்கள் என்ற ஒருசமூக அடுக்கமைவு இன்று யாழ்ப்பாணத்தில் மிகப்பிரபலம். அதிகதடவைகள் குருதிவழங்கியமைக்காக கௌரவம் பெற்றபலர் இன்றுயாழ்பாணத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் வழங்கிய குருதியில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். இவ்வாறாகக் குருதிகொடையில் மிகப் பெரும்மாற்றமும் விழிப்புணர்வும் ஏற்படக்காரணமான மனிதர் வைத்தியர்சிவசங்கர். அதிகப்பேரிடம் இரத்தம் எடுத்தமனிதர். அதனால் அவர்பேசும் போது இரத்தம் எடுக்கின்றார் எனப்பலர் சிலேடையாக விமர்சிப்பதிலும் அர்த்த முண்டு.

 

இன்று யாழ்ப் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி நடமாடும் குருதிகொடை நிகழ்வுகளை நடாத்தவல்ல வளங்களைக் கொண்டிருக்கின்றது. நடமாடும் இரத்ததான முகாம்கள் பலவற்றை நடாத்தி அதனை இலகுவானதொரு செயற்பாடாகமக்களிடம் எடுத்துச் சென்றவர் வைத்தியர்சங்கர்.

 

வைத்தியர் சங்கர் ஒரு தீவிரமான சாயிபத்தர். வட மாகாணத்திலுள்ள சாயி சமித்திகள் பலவற்றின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால்ஆன உதவிகளை ஆற்றிவருகின்றவர். குறிப்பாக யாழ்ப்பாணப் பக்கலைக்கழகத்துக்கு முன்பாக வைத்தியகலாநிதி கணேசமூர்த்தி தலமையில் நடைபெற்றுவரும் சாயிசமித்தியில் ஒரு செயற்பாட்டுத்திறன் மிக்க அங்கத்தவர்.அங்கு அடிக்கடி ஆன்மீக உரைகளை நிகழ்த்தி வளரும் தலைமுறைக்கு நல்ல கருத்துக்களை விதைப்பவர்.சாயிபத்தர்கள்கூட எந்தப் பிரார்த்தனைகளையும் அவரது விடுதலைக்காக இதுவரை செய்யவில்லை.

 

 

 

 

பாடசாலைகள் தனியார் கல்விநிலையங்கள் என்பவற்றில் அவ்வப்போது தலமைத்துவக் கருத்தரங்குகள் ஆளுமை விருத்திச் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்தி இளைய சமூகம் தவாறான பாதையில் செல்லாதிருக்க வழிகாட்டியவர் வைத்தியர் சங்கர். பலரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சமூகப்பிறழ்வுகளைக் கண்டு ஐயோ முறையோ எனக்கூச்சலிட்டுக் கத்தும் போது அவற்றைத் தடுக்க தேவையான அடிப்படைகளைச் சதா தேடிக்கொண்டும்செயற்படுத்திக்  கொண்டும் இருந்த மனிதர் வைத்தியர் சிவசங்கர். சமூகத்தைப்பற்றியே அவரது சிந்தனை சதா சுழன்று கொண்டிருந்தமையால் தனிப்பட்ட வாழ்வில் சில தவிர்க்க முடியாத பின்னடைவுகள் ஏற்பட்டமை மனவருத்தத்துக்குரியதே. அவ்வாறான சில பின்னடைவுகளும் சிலவேளைகளில் அவரைப் பைத்தியக்காரர் என மற்றவர்கள் விளங்கிக்கொள்ள வாய்ப்புக்களை வழங்கியிருக்கலாம்.

 

தனக்குத்தவறு எனத்தெரியும் எந்த விடயத்தையும் தனித்து நின்று எதிர்த்து பேசும் துணிவும் வாண்மையும் சங்கரின் தனித்துவமான இயல்புகள். இந்த இயல்புதான் இன்று அவருக்கு ஆபத்தைக் கொண்டு வந்துள்ளது.

 

தேசியத்தின் தனிக்காவலர்கள் தாம்தான் என்றும் தாம் இல்லாவிட்டால் தமிழர்களை வெள்ளம் எப்போ அடித்துச் சென்றிருக்கும் என்றும் மார்தட்டும் தமிழ் அரசியல்வாதிகள் – பத்திரிகைகள், இணையங்கள் அறிக்கைகள் வாயிலாக வெறும் அறிக்கைப் போராட்டத்தை நாடாத்திக் கொண்டிருந்த “தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்க்கும்” விடயத்தைச் சங்கர்தானே கையில் எடுத்து நேரடியாக இராணுவ முகாமுக்குச் சென்று துணிந்து இராணுவ அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டு நியாயங்களைப் பேசியிருக்கின்றார்.

 

தமிழர்களுக்குப் பைத்தியக்காரராகத் தெரிந்த வைத்தியர் சங்கர் சிங்கள இராணுவத்துக்கு ஆபத்து மிக்க பயங்கரவாதியாகத் தெரிந்திருக்கின்றார்.

 

உடனே இத்தகையவர்களை தமிழ் சமூகத்தில் விட்டால் ஆபத்து என்று எண்ணி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அள்ளி உள்ளே போட்டிருக்கின்றார்கள்.

 

வைத்தியரான அவரதுமனைவி திருமகள் தனது கணவரை விடுவிக்க பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டும் முடியாதுபோய் இருக்கின்றது.

இதில் வேதனை என்ன வென்றால் எந்த சமூகத்துக்காகத் தேவையான வகையில் காலக்கனதியை உணர்ந்து யதார்த்தமாக தனது கருத்துக்களை சங்கர் முன்வைத்தாரோ அந்தச் சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த மனிதர்களும் அமைப்புக்களும் அவரது கைதுகுறித்து மௌனம் காக்கின்றனர்.

 

பருவகால கொந்தளிப்புக்களை மட்டும் விளைவிக்கும் திறன்மிக்க பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்ற விடையங்கள் பெறும் முக்கியத்துவத்தைச் சதா தமிழ் சமூகம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் சங்கரின் கைது பெறவில்லை.

 

வன்னியில் பெய்த அடைமழையில் செத்துப்போன ஆட்டுக் குட்டிபோல அமைந்திருக்கின்றது வைத்தியர் சங்கரின் கைது.

 

பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓடிப்போய் தன் வாகனக் கண்ணாடியைத் தொலைத்த தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூட வைத்தியர் சங்கரின் கைதில் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. அவருக்கு சொந்தமான பத்திரிகையில் வெளி வந்த வைத்தியர் சங்கரின் கட்டுரைக்காக ஆளுனர் சந்திரசிறியால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் பேசப்படுகின்றது. அதுமட்டுமன்றி சரவணபவனும் ஒரு தீவிர சாயிபத்தர். அந்த வகையிலும் சிவசங்கருக்கும் அவருக்கும் தொடர்புண்டு. ஏனோ இன்னும் பேசத்தக்க பிரதிபலிப்பு சரவணபவனிடம் இருந்து எழவில்லை.

 

அது போன்றே இராணுவத்துக்கு தமிழ் பெண்களை ஆட்சேர்ப்பது ஆபத்தானது எனக் குரல் கொடுத்துத் தமிழ்மக்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மை பிரகடனப்படுத்திய பலரும் வைத்தியர் சங்கரின் கைது குறித்து சில ஆறுதல் வார்த்தைகள் தானும் பேசவில்லை.  இதுமிகவும்ஆபத்தானது.

 

 

உண்மையில் தமிழ்மக்களின் ஆரோக்கியமான எதிர்காலம் குறித்த அக்கறையுள்ள மனிதர்கள் வைத்தியர் சங்கரின் விடுதலையில் அக்கறை காட்ட வேண்டும். தமிழர் நலன்களுக்காக அரசியல் மகுடங்களைச் சுமப்பதாக முகம் காட்டும் அல்லது நடிக்கும்  மனிதர்கள் சங்கர் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களுக்கு வழங்க வேண்டிய ஆதரவையும்  நம்பிக்கையும் வழங்குவதாகத் தெரியவில்லை. அரசியற்தளத்தில் நிகழவேண்டிய இந்த நகர்வு இன்னும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இந்த நகர்வுதான் சமூக அக்கறை கொண்ட மனிதர்களை இன்னும் இன்னும் எதிர்காலத்தில் உருவாக்குவதற்கான உந்துசத்தியும்கூட.

 

தம்மைவிட வேறொருவர் மக்கள் தொடர்பில் சிந்திப்பது தமது இருப்புக்கு ஆபத்தாகி விடும் எனத் தமிழ்த் தலைவர்கள் நினைப்பார்களாகில் சுயநலம் சார்ந்து அவர்கள் முடிவுசரியானதே.

 

திசைகெட்டு திக்குதடுமாறி நிற்கும் தமிழ் இனத்துக்கு வைத்தியர் சங்கர் போன்றபல மனிதர்கள் தேவை. இந்தக் கனதியை உணர்ந்து சங்கரின் விடுதலைக்கு உரிய அரசியல் அழுத்தங்களை வழங்குங்கள். ஒரு லட்சம் மக்களைக் கொன்ற கொலைகாரரையே சிங்கள அதிகார வர்க்கம் வெட்கம் கெட்டுப் பாதுகாத்து நிற்கிறது. ஆனால் தனது மக்களுக்காக நியாயம் கேட்ட,  போகட்டும் “ஒரு பயித்தியக்காரனுக்காகக்” குரல் கொடுத்தால் நீங்கள் என்ன குறைந்து போய்விடுவீர்களோ???

இதுநிற்க பாவம் வைத்தியர்சங்கர். சுயநலத்தில் சுழலும் ஈனத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துத் தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில் தட்டிக்கேட்க வேண்டியதைக் கேட்டு இன்று உலகத்தின் பார்வையில் பைத்தியக்காரர் ஆகி நிற்கின்றார்.

 

சிலவேளை “புனர்வாழ்வின் பின் விடுதலையாகி” வந்து அவரும் அதிபுத்திசாலியாகலாம். தானுன்டு தன் குடும்பமுண்டு. தனியார் வைத்தியசாலையுண்டு. பட்டமுண்டு.பதவியுண்டு. பாதுகாப்புமிக்க வாகனமுண்டு. என அவரும் தன் தொழில் சார்ந்து சிந்தித்துப் புத்திசாலியாகலாம். எனப் பலர் எண்ணக் கூடும்.

 

ஆனால் வைத்தியர் சங்கரோடு நெருங்கிப் பழகிய பலருக்குத்தெரியும் அவர் ஒருநிரந்தரபைத்தியக்காரன் என்று.

 

 

 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பல்லவன்-

Filed Under: முக்கிய செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English