அலெக்ஸ் பாண்டியன் – சினிமா விமர்சனம்

குனி பட சறுக்கலில் இருந்து கார்த்தி மீண்டு வர அலெக்ஸ் பாண்டியன் மூலம் சுராஜ் கை கொடுப்பார் என்று பார்த்தால் அதில் ஏமாற்றமே மிச்சம் . கதை , லாஜிக் இந்த வஸ்துக்களையெல்லாம் கழட்டி விட்டு விட்டு ஒரு பொழுதுபோக்காக மட்டும் கூட படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை . படம் பார்க்கும் போது  ” கேட்கறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் ஒழுகுதும்பான் ” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது …

முதல்வர் ( விசு ) மகளை ( அனுஷ்கா ) பத்து லட்சத்திற்காக கடத்தும்  அலெக்ஸ் பாண்டியன் ( கார்த்தி ) வில்லன் கும்பலின் (சுமன் / மிலன் சோமன்) நோக்கம் தெரிய வர அவர்களிடமிருந்து மகளை காப்பாற்றி மீண்டும் முதல்வரிடமே ஒப்படைக்கிறார் …

பருத்திவீரன் ” படத்திற்காக தேசிய விருது பெற்ற ப்ரியாமணி கவர்ச்சிக்குப் பின்னால் போய் விட முதல் படத்திற்கே  பெரிய அங்கீகாரம் பெற்ற கார்த்தி யும் கமர்சியல் சக்சஸ் என்கிற பெயரில் சகதிக்குள் சிக்கிக்கொண்டிருப்பது துரதிருஷ்டம் . விஜய் , விஷால் , சிம்பு  இவர்களை தொடர்ந்து கார்த்தியும்  பட்ட பின் திருந்துவார் என இப்போதைக்கு நம்புவோமாக ! …

பரபரவென்று முதல் சீனில் ஓடி வரும் அனுஷ்கா பிறகு இடைவேளை வரை காணாமல் போய்விடுகிறார் . கிளைமாக்ஸ்சில் வில்லன்களால் கடத்தப்பட்டு ” கட்டிப்போட்டு அடிக்கிறீங்களே . நீங்கல்லாம் ஆம்பளைங்களா ? ” என்று வில்லன்களை பார்த்து கேள்வி கேட்டு உசுப்பேற்றி கார்த்தியிடம் செம உதை வாங்க விடுகிறார் . வில்லன்கள் ரொம்ப்ப்ப நல்லவர்களாய் இருப்பதால் அழகான அனுஷ்காவிடம் ஆண்மையை நிரூபிப்பதற்கு வேறெந்த முயற்சியிலும் ஈடுபடாமல் கார்த்தியின் கட்டை அவிழ்த்து விட்டு தர்ம அடி வாங்குகிறார்கள் …

கதையாவது , மண்ணாவது சந்தானம் காம்பினேஷன்ல காமெடி இருந்தா போதாது என்று நினைத்து விட்ட  இயக்குனர் அவருக்கு மூன்று தங்கைகளை கொடுத்து காம நெடியையும் கூட்டியிருக்கிறார் . படத்திற்கு சந்தானம் ஆறுதலாய் இருந்தாலும் முதல் பாதி  முழுவதும் இதை வைத்தே ஒட்டியிருபப்து சலிப்பை தருகிறது . சுராஜின் முந்தைய படங்களில் இருந்த காமெடி பெப் இதில்  மிஸ்ஸிங் . இரண்டாம் பாதியில்  காட்டுக்குள் மனோபாலாவை வைத்து கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . சரவணன் எபிசோட்  படத்திற்கு தேவையில்லாத திணிப்பு . நாலு பக்கம் , தய்யா பாடலும் தாளம் போட வைக்கின்றன …

படத்தில் ஏற்கனவே இருக்கும் வில்லன்கள் பத்தாது என்று கடைசியில் பிரதாப்போத்தன் வேறு வில்லனாய் மாறி வெறுப்பேற்றுகிறார் . ட்விஸ்ட் குடுக்குறாங்கலாம் ! அட போங்கப்பா ! . ரயிலடி சண்டையில் தடாலடியாக ஆரம்பிக்கும்  படம் போக போக தடம் புரண்டு விடுகிறது . அடுத்தடுத்த காட்சிகள் சொல்லி வைத்தது போலவே எந்த வித ட்விஸ்டும் இல்லாமல் வருவதும் , சுத்தமாக நம்மை ஒன்ற வைக்காத திரைக்கதையும் கொட்டாவியை வரவைக்கின்றன …

இந்த மாதிரி படங்களுக்கு லாஜிக் பார்க்க கூடாது தான் , இருந்தாலும் சில சாம்பிள்ஸ் . டாடா சுமோ , ஸ்கார்பியோ போன்ற வாகனங்களில் வரும் வில்லன் அடியாட்களை கார்த்தி ஆம்னி ஒட்டிய படியே இடித்து அந்தரத்தில் பறக்க விடுகிறார் . பயங்கர பாதுகாப்புடன் கப்பலில் இருக்கும் முதல்வரின் மகள் அனுஷ்காவை  ஏதோ பெட்டிக்கடையில் இருந்து கமர்கட்டை களவாடுவது போல கார்த்தி கடலுக்கடியில் நீந்திய படியே கடத்தி வருகிறார், ஆயிரம் கோடி பிசினசுக்காக முதல்வர் மகளை கடதுவார்களாம் , அவர் சைன் பண்ணி முடித்தவுடன் மகளை விட்டு விடுவார்களாம் . தன்  மகளை கடத்தியதால் தான் அக்ரிமெண்ட் சைன் செய்தேன் என்று சொல்லி அதை கேன்சல் செய்து விட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாநில முதல்வருக்கு எத்தனை நேரம் ஆகும் ? ஒரு வேளை படம் விறுவிறு திரைக்கதையால்  கட்டிப்போட்டிருந்தால் இந்த கேள்விகளெல்லாம் நம்மை உறுத்தாமல்  இருந்திருக்கும் …

கார்த்தி , சுராஜ் இருவருக்குமே இதற்கு முன்னாள் பொங்கலுக்கு ரிலீசான படங்கள் பெரிய வெற்றியை தந்திருக்க அது போலவே   அலெக்ஸ் பாண்டியனும் பொங்கலுக்கு விருந்தாக அமைவான் என்று எதிர்பார்த்தால் அவன் அரைத்தமாவாகவே இருக்கிறான் . இதையும் மீறி பொங்கலுக்கு புதுப்படம் போவேன் என்று ஆயா மீது சத்தியம் செய்தவர்கள் ,  அனுஷ்காவை அரை நிஜாருடன் பார்க்க நினைப்பவர்கள் , கார்த்தி – சந்தானத்தின் தீவிர ரசிகர்கள் , தெலுங்கு டப்பிங் படங்களை எத்தனை முறை டி.வி யில் போட்டாலும் அத்தனை முறையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அரைத்த மாவை ருசித்துப் பார்க்கலாம்

Filed Under: சினி விமர்சனம்தமிழ்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English