சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்

chennaiyil-oru-naal-sarathukumar

தயாரிப்பு – ஐ பிக்சர்ஸ் – மேஜிக் பிரேம்ஸ் – ஆர். ராதிகா சரத்குமார் & லிஸ்டின் ஸ்டீபன்

இயக்கம் – ஷஹித் காதர்

இசை – மெஜோ ஜோசப்

கதை – பாபி – சஞ்சய்

ஒளிப்பதிவு – ஷேஹநாத் ஜே. ஜலால்

படத்தொகுப்பு – மகேஷ் நாராயண்

வசனம் – அஜயன் பாலா

நடனம் – ஷங்கர்

சண்டைப் பயிற்சி – மிராக்கல் மைக்கேல்

மக்கள் தொடர்பு – நிகில்

வெளியான தேதி – 29 மார்ச் 2013

னிதன் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாகப் போகும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய வலியுறுத்தும் உன்னதமான கதை.

படத்தில் ‘இதயத்தை’ தானம் கொடுக்க வைத்து நம் ‘இதயத்தை’ தொட்டு விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஞாபகப்படுத்தும் கதைதான் ‘சென்னையில் ஒரு நாள்’. அழகான காதல், அன்பான அண்ணன், பாசமான கணவன், அருமையான குடும்பம் இப்படி ஆரம்பமாகும் படம் போகப் போக அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பை  ஒரு சென்டிமென்ட் கதையில்  ஏற்படுத்தியிருப்பது இதுதான் முதன் முறையாக இருக்கும்.

இயக்குனர் ஷஹித் காதருக்கு முதலில் அழுத்தமான ஒரு ‘ஷேக் ஹேன்ட்ஸ்’.

பல கனவுகள், லட்சியங்களுடன் வேலைக்கு முதல் முறையாகச் செல்லும் சச்சின் வழியில் விபத்தில் சிக்கி மூளை செயலிழந்து மரணத்தின் வாசலில் நிற்கிறார். அதே சமயம் இதயத்தில் உள்ள பிரச்சனையால் உயிர் வாழும் நேரத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜின் மகள்.

பலரின் வேண்டுகோளுக்குப் பிறகு மூளை செயலிழந்து இருக்கும் சச்சினின் இதயத்தை எடுத்து பிரகாஷ்ராஜின் மகளுக்கு பொருத்த சம்மதிக்கிறார்கள் சச்சினின் பெற்றோர். அதன் பின் சென்னையிலிருந்து வேலூருக்கு அந்த ‘இதயம்’ எப்படி பயணமாகிறது என்பதை துடிப்புடன் சொல்லிருக்கிறார்கள்.

படத்தில் இவர்தான் நாயகன், இவர்தான் நாயகி என யாரையும் தனித்து குறிப்பிட முடியாது. ஒரு உயிரிலிருந்து இன்னொரு உயிருக்கு உயிரூட்ட பாடுபடும் பலரும் நாயகன், நாயகியரே.

சென்னை டூ வேலூர் 170 கி.மி, இந்த தூரத்தை 1.30 மணி நேரத்தில் கடக்க திட்டம் போடும் போக்குவரத்து ஆணையர் சரத்குமார், ஜீப்பை ஓட்டிச் செல்லும் போக்குவரத்து காவலர் சேரன், கூடவே டாக்டராகச் செல்லும் பிரசன்னா,  இதயத்தைக் கொடுத்த சச்சினின் நண்பர் மிதுன், இவர்கள் மட்டுமல்லாது இவர்களுக்காக ஒத்துழைக்கும் அனைவருமே நம்மைப் பொறுத்தவரை இந்த படத்தின் ஹீரோக்கள்தான்.

ஒரு பக்கம் மகனை இழந்த பெற்றோரான ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், மகன் சச்சின் இழந்த துக்கத்தைப் பொறுத்துக் கொண்டு மகனின் இதயத்தை தானமாகக் கொடுப்பதில் உயர்ந்து நிற்கிறார்கள். இவர்களை சம்மதிக்க வைக்கும் சச்சினின் காதலி பார்வதி அவர்களை விட உயர்ந்து நிற்கிறார்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், மகளைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படாத ‘பிஸியான நடிகர்.’ இவரின் மனைவி ராதிகா. மகள் சீரியஸாக இருக்கிறார் என்று தெரிந்தும் கூட வரும் வழியில் டிவிக்கு பேட்டி கொடுத்து விட்டு வரும் பிரகாஷ்ராஜைப் பார்த்து ராதிகா கேட்கும் கேள்விகளுக்கு திரையரங்கில் கைதட்டல் அதிருகிறது.

‘பேரும், புகழும் ஓய்ந்து வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்காரும் போது , அப்ப யாருமே எட்டிப் பார்க்க மாட்டாங்க, நாங்கதான் உங்க கூட இருப்போம்,” என சொல்வது உண்மையோ உண்மை. அசத்திட்டீங்க அஜயன் பாலா.

மல்லிகா, இனியா மற்றும் விஜயகுமார், சந்தானபாரதி, மனோபாலா கொஞ்சமாக வந்து போகிறார்கள். இருந்தாலும் கதையோட்டத்திற்கு முக்கியமான கதாபாத்திரங்கள்.

சரியான நேரத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவின் ‘என்ட்ரி’.

மெஜோ ஜோசப்பின் இசையில் ‘திக் திக்’ நிமிடங்கள் இசையால் இன்னும் ஏற்றம் பெறுகிகின்றன.  கதாபாத்திரங்களுடன் ஷேஹநாத் ஜே. ஜலால் கேமரா லாவகமாக பயணிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பாக பயணிக்கும் படத்தில் மகேஷ் நாராயணணின் படத்தொகுப்பு அந்த விறுவிறுப்பை இன்னும் அதிகமாக்குகிறது.

“இந்த படத்தைப் பார்த்து , போக்குவரத்து சிக்னலில் ‘ரெட்’ சிக்னல் விழுந்தால் இரண்டு பேராவது அதை மீறிச் செல்லாமல் இருந்தால் போதும், அதுவே இந்த படத்துக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றி, நாம் கொடுக்கும் மரியாதை….”


Filed Under: சினி விமர்சனம்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English