கௌரவம்

குளிரூட்டும் முன் பனியில் ஒரு கப் டீ குடிக்கிற ருசியோடு இருக்கும் ராதாமோகனின் படங்கள். இந்தமுறை அவர் தந்திருப்பது டீக்கு பதிலாக ஆளுக்கொரு துண்டு நெருப்பு! உச்சந்தலையில் தீக்குச்சியோடு திரியும் அத்தனை சாதி வெறியர்களும் பார்க்க வேண்டிய படம் இது. தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று மேலும் பெட்ரோல் ஊற்றுகிறாரோ என்கிற ஐயத்தையும் ஏற்படுத்துகின்றன சில காட்சிகள். பட்…? ராதாமோகனின் இந்த வேகமான சவுக்கு வீச்சுக்கு முதுகு காட்டியே ஆக வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள்.

 

தன்னுடன் படித்த கல்லூரி நண்பனை தேடி அவனது சொந்த கிராமத்துக்கு போகிறார் ஹீரோ. அவனது பெயரை சொல்லி யாரை விசாரித்தாலும், ‘ஊருக்கு கிளம்புற வழியை பார்க்கிறீயா?’ என்றே பதில் சொல்கிறார்கள். ஊர் பெரிய மனிதரின் பெண்ணை அழைத்துக் கொண்டு அந்த ஊரை விட்டே ஓடிப்போன நண்பன் எங்கே இருக்கிறான்? உயிரோடுதான் இருக்கிறானா? இப்படி சந்தேகம் பொறிதட்ட, தேட ஆரம்பிக்கிறார் ஹீரோ.

ஜோடிகள் இருவரும் போட்டுத் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்கிற உண்மை ஆடியன்சுக்கு முன்பே தெரிந்து விடுவதுதான் திரைக்கதையின் பெரும் குழி என்றாலும், அடுத்தது என்னவாக இருக்கும் என்கிற ஆவலையும் லேசாக து£ண்டி விடுகிறது ராதாமோகனின் டிராவல். மறுபடியும் ஒரு பட்… இந்த திரைக்கதையில் விவேகம் இருக்கிற அளவுக்கு வேகம் இல்லையே பிரதர்!

அந்த குக்கிராமத்தில் திரியும் குமாரவேலு ஏன் சென்னை பாஷையிலேயே பேசுகிறார் என்று அலுப்பு தட்டுகிற நேரத்தில், ‘நான் பத்து வயசுல ஊர விட்டு ஓடிப்பூட்டேன் சார். மெட்ராஸ்லதான் சுத்திகிட்டு திரிஞ்சேன். என்னா வாழ்க்கை சார் அது. அந்த ஊர்ல ஒருத்தன் கூட இன்னா சாதி நீன்னு கேட்டதேயில்ல தெரியுமா?’ என்று அவர் வாயாலேயே சொல்ல வைக்கிற ராதாமோகன், இதுபோல படத்தில் வரும் சின்ன ஓட்டைகளை கூட சர்வ சுலபமாக பூசி விடுவது சிறப்பு. ஆரம்பத்தில் அந்த குழந்தை சொல்லும் ‘இல்ல’வுக்கு கூட க்ளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு அழுத்தம் கொடுப்பதும் டச்!

‘எத்தனை நாளைக்குடா இப்படி பொறுமையாவே இருப்பீங்க? திருப்பி அடிக்கணும்’ என்று குமாரவேல் பொங்குகிற போது, ஆஹா… ஊரு நல்லாயிருந்தாலும் இவய்ங்க கிளப்பி விட்ருவாய்ங்க போலிருக்கே என்கிற அச்சம் எழாமல் இல்லை. ராதாமோகனின் இந்த வசன விளைவுகளை போக போக கவனிக்கலாம்.

சாதிவாரி கதைகளை தொடுகிற போது மானாவாரியாக விமர்சனங்கள் வந்து சேரும். அதற்கெல்லாம் அசராமல்தான் சில விஷயங்களை தொட்டிருக்கிறார் ராதா. அந்த ரெட்டை டம்ளர் மேட்டர் எடுத்த எடுப்பிலேயே செம ஷாக் தருகிறது. (இப்பவுமா சார் இருக்கு அதெல்லாம்?)

சரி… கதையை விட்டுவிட்டு கதை மாந்தர்களுக்கு வருவோம். பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனின் ரிலேட்டிவ்தானாம் இந்த ஹீரோ. பெயர் அல்லு சிரிஷ். நம்ம ஊருக்கு பொருந்தாத முகம். பல இடங்களில் ‘தேமே’ என்று நிற்கிறார். இந்த படத்தின் சறுக்கலுக்கு இவரே முழு முதற் காரணமாக இருப்பார் என்று நாம் சொன்னால் இப்போதைக்கு கோபித்துக் கொள்கிற கௌரவம் டீம், இன்னொரு நாளைக்கு ‘ஆமாம்’ என்று ஒப்புக் கொள்ளும்.

கவுதமியை முப்பதாண்டுகளுக்கு முன்பு தேடி மீட்டெடுத்தது போல அழகான முகம் ஹீரோயின் யாமினி கவுதமுக்கு. கோடம்பாக்க மேப் கொஞ்ச வருஷத்துக்கு யாமினி வீட்டில் கொடியாக பறக்கக் கூடும். ஸ்பீக்கர் போனில் சிரிஷின் அம்மா புகழ்வதை கேட்டு வெட்கம் பூக்கும் அந்த முகத்தில், அவ்வப்போது வந்து போகும் சீரியஸ் ஆக்ஷன்கள் ஹைக்கூ மின்னல்கள். ஒரு தொழிற்சங்கவாதியின் மகள் எப்படியெல்லாம் இருப்பாரோ, அப்படியெல்லாம் இருக்கிறார் இவர். நல்ல வரவு. இவருக்கு நமது நல்வரவும் கூட.

காலனி மனிதர்களாக ராதாமோகன் தேர்வு செய்திருக்கும் அத்தனை பேரும் அவ்வளவு கனக்கச்சிதம். சண்முகத்தின் அப்பாவாக நடித்திருக்கும் அவரது முகத்தில்தான் எத்தனை இயலாமை, சோகம்! அந்த கண்ணாடியை அவர் அணிந்து கொள்கிற போது தன் மகனே வந்து அதை அணிவித்த மாதிரி சந்தோஷப்படுவதை அப்படியே பிரதிபலிக்கிறார் அவர். ‘பாவம், எப்படியிருந்த குடும்பம் இப்படியாகிருச்சே…’ என்று தன் முதலாளி குடும்பத்திற்காக அந்த நிலையிலும் சோகப்படும் அந்த காலனி பெண்ணும் கவர்கிறார்.

பிரகாஷ்ராஜிடம், ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்று யார் பார்த்தாலும் கேட்கிற மாதிரி ஒரு கேரக்டரை தந்திருக்கிறார் ராதாமோகன். பல படங்களில் ஊதி தள்ளியதை மறுபடியும் ஒருமுறை செய்திருக்கிறார் இவர்.

இவரது மகனாக நடித்திருக்கும் பிரம்மாஜியிடம் அப்படியொரு துடிப்பு இருக்கிறது. தெலுங்கு ஏரியாவுக்கு போனால், சில வருடங்களுக்கு வில்லன் நாற்காலி உங்களுக்குதான் பிரதர். இவரது மனைவியாக நடித்திருப்பவர் யாரோ? அந்த கண்களில்தான் எத்தனை சோகம்?

விஜியின் வசனங்களுக்கேயுரிய நையாண்டியும், முள்ளும் ஒருங்கே இணைந்திருக்கிறது இப்படத்தில். ‘ஒரு குழந்தையை கொல்றதுக்காகவா இன்னொரு குழந்தையை பெத்தேன்’ என்பதெல்லாம் ஸ்பீக்கரில் போட்டு கவுரவ கொலைகளுக்கு பெயர் போன கிராமங்களில் தெரு தெருவாக ஒலிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.

ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு அபியும் நானும் போலவே அழகோ அழகு! கானா பாலாவின் குரலில் ‘ஒரு கிராமம்’ பாடல் திரும்ப திரும்ப கேட்கலாம். மற்றபடி தமன் இந்த படத்திலும் கோட்டை விட்டிருக்கிறார்.

இப்படத்தின் ஹீரோ போகக் கூடாத ஊருக்குப்போய் அவஸ்தை படுவதை போல, தொட கூடாத கதையை தொட்டிருக்கிறார் ராதாமோகன். அதனாலேயே பிரச்சார படம் போல் அமைந்திருக்கிறது கௌரவம்.

உங்களை பாராட்ட ‘மொழி’யேது என திணறிய அதே உதடுகளால் இப்போதும் பாராட்ட நினைக்கிறோம். ஆனால் பிரசாரத்திற்கு துணை போகிற உதடல்லவே இது!

ஆர்.எஸ்.அந்தணன்

Filed Under: சினி விமர்சனம்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English