சூது கவ்வும் – விமர்சனம்!

நகைச்சுவைக்கென எந்த பார்முலாவும் இல்லாமல் ஒரு புது ரகமாக‌ கதை சொல்லும் படமாக‌ வந்திருக்கும் படம் தான் ‘சூது கவ்வும்’. கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் இயக்குநர் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றி படியாக அமைந்திருக்கிறதென்பதில் எந்தவித‌ ஐயமுமில்லை..

சரி படத்தின் கதைக்கு வருவம், ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தான் பார்க்க செம காமெடியாக இருக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் மகனையே கடத்தி 2கோடி பெறும் திட்டம் உருவாகிறது. கடத்தி பணத்தையும் அமைச்சர் மகனின் உதவியுடன் பெறுகிறார்கள். ஆனால் பணத்துடன் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தி அமைச்சரின் மகன் பணத்தை தூக்கிச் சென்று விடுகிறார்.

பணமும் போய் ஒரு முரட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரும் துரத்துவதால் கோர்ட்டில் சரணடைகிறார்கள். பிறகு என்னவானது, பிரச்சனையில் இருந்து தப்பினார்களா என்பதே படத்தின் கதை.

ஒரு நல்ல படம்னா அது இப்படித்தான் இருக்கும் என நாம் வைத்திருக்கும் ஒரு கணக்கையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிய கருத்தோ, மனதை தொடும் சம்பவங்களோ இல்லை. கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்க முடியாது. ஆனாலும் எல்லா இடத்தில் என்ஜாய் பண்ண முடியும் என மிகததிறமையாய் எழுதப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படத்தின் நிஜ ஹீரோ.

ஒரு திரைக்கதை எழுத்தாளராய் இயக்குநர் நலன் பின்னிப்பெடலெடுக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அழகாய் செதுக்கி, சொல்ல வேண்டியதை சொல்லி, அதை காமெடியாக்கி ரசிக்கவைத்து, அதே நேரத்தில் பர்பார்மென்ஸ்கும் ஸ்கோப் குடுத்து என எல்லா விதங்களிலும் கவனமாய் கையாண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் சற்று மனநலம் பிறழ்வு கொண்ட பாத்திரம். கடத்துவதற்கு ஆறு சட்டங்களை போட்டு அதனை கடத்துபவர்களுக்கு பாடமாக எடுக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.

முதல் காட்சியே ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து அந்த பெண்ணிடமே அடி வாங்கி தப்பித்து ஒடும் காட்சியில் ஆரம்பிக்கும் அவரது அட்டகாசம் படம் இறுதி வரை குறையாமல் இருக்கிறது.

விஜய் சேதுபதி.. இந்த வருடத்தில் அதிகம்பேர் பொறாமைப்படக்கூடிய நடிகர். எப்படித்தான் இந்தாளுக்கு மட்டும் இப்படி மாட்டுதோ என பலர் வியத்தாலும், இனி மேல் இந்த குறும்பட இயக்குநர்கள் தான் இன்டஸ்ட்ரியை ஆட்டிவைக்கப்போகிறார்கள் என ஏதோ ஒரு விதத்தில் யூகித்து அவர்களை மதித்து, நட்பாகி, நெருக்கமாகி தன்னை உருவாக்கிகொண்ட அவரது புத்திசாலித்தனம் கலந்த எளிமைத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த தொடர் வெற்றிகள்.

கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் அஞ்சலியின் தோழியாக அறிமுகமாகி கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்தவர். அப்படிப்பட்டவரா இவர் என கேட்கும் வகையில் மாடர்ன் உடையில் எப்பொழுதும் விஜய்சேதுபதியின் உடன் வரும் கதாபாத்திரம். சற்று அலுப்பு ஏற்படும் போது பாதி படத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

வேலையில்லாத நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக சிம்ஹா. ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி அதனால் பிரச்சனை ஏற்பட்டு ஊரே அடித்து துரத்தி சென்னைக்கு பிழைக்க வருகிறார். இன்ஸ்பெக்டருக்கு பயந்து உதட்டில் சிகரெட் துடிக்க பயந்து இருக்கும் காட்சியில் தியேட்டரே அலறுகிறது.

மற்றொரு நண்பராக ரமேஷ். காலையில் சரியாக எட்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி வைத்து டேபிளில் அமர்ந்து நிதானமாக சரக்கு அடிக்கும் கேரக்டர். டார்க் ரூமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்து அடித்து துவைக்கும் போது “இதுக்கு பேரு தான் இருட்டு அறையில் முரட்டு குத்தா” என்று அலறும் போது தியேட்டரில் விசில் சத்தம் தான். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். சரியான படங்கள் அமைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

இன்னொரு முக்கியமாய் குறிப்பிட வேண்டிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குநர் எந்த அளவுக்கு காட்சிகளில் புதுமையை கொண்டுவருகிறாரோ அதே அளவுக்கு இசையிலும் இவர் ஜமாய்க்கிறார். இவரது இசை படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. அதேபோல் ஒளிப்பதிவாளர் தினேஷும் நிறைவாய் செய்திருக்கிறார் தன் பணியை.

இன்னும் படத்தில் கவனிக்க பலர் பெயர் தெரியாத நடிகர்கள் இருக்கின்றனர். போலீஸ் பாலோ செய்து வரும் போது இரண்டு கோடி பணத்துடன் அமைச்சரின் மனைவி வரும் போது அவரிடம் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியில் பிரமாதமான காட்சியமைப்பு. எதிர்பாராத ட்விஸ்ட் அது. லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் சிறந்த எண்டர்டெயினர் படம் இது.

 

Filed Under: சினி விமர்சனம்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English