நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ

கரைவேட்டிகளில் ‘இங்க்’ அடிக்கிற வேலையை எப்போதும் கச்சிதமாக செய்வார் மணிவண்ணன். வயசான குதிரையாக இருந்தாலும் ‘வாங்கடா பார்க்கலாம்’ டோர்ன் இருக்கிறது இந்த படத்தில் வரும் மணிவண்ணனுக்கும், அவரது வசனங்களுக்கும்! ‘மணி…’ என்று சத்யராஜ் அழைக்க, ‘…ங்கணா’ என்று மணிவண்ணன் பம்முகிற காட்சிக்காகவே பலமுறை சிட்டிங் கொடுக்கலாம் இந்த நாகராஜசோழனுக்கு! குறைந்த ஓட்டில் ஜெயித்து கோட்டைக்கே ராஜாவாகிற சில அதிர்ஷ்டசாலிகள் மாதிரி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் கலெக்ஷனை அள்ளக்கூடும். ஏனெனில் இந்த அரசியல் நையாண்டிகள் அத்தனையும் காலத்தின் பசிக்கேற்ற ‘கம கம’ பிரியாணியல்லவா?

முதல்வரை மிரட்டி துணை முதல்வராகி, பின்பும் அதையும் தாண்டி முதல்வராகிறார் சத்யராஜ். தனது மகனை டெல்லிக்கு அனுப்பிவிட்டு தானே கடைசிவரை இங்கு ஆள வேண்டும் என்பது அவரது ஆசை. அவர் நினைப்பில் மகன் மண்ணை போட்டாலும், ஆட்சி கைக்கு வந்த திருப்தி அவருக்கு. இந்த நேரத்தில் வாங்கிய லஞ்சத்திற்காக மரங்கள் அடர்ந்த காட்டை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்க்க துடிக்கிறார். காட்டை பாதுகாப்போம் என்று பழங்குடி மக்கள் சத்யராஜுக்கு எதிராக கூடுகிறார்கள். இதற்கிடையில் கொலைகள், நம்பிக்கை துரோகம், மிரட்டல், மோதல், காதல், கசமுசா என்று ஃபார்முலா மாறாத அரசியல் படமாகவும் நகர்கிறது கதை. இறுதியில் முதல்வர் சத்யராஜை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு மகனே நாற்காலியை விடாமல் பிடித்துக் கொள்வதுதான் க்ளைமாக்ஸ்.

கதையை விடுங்கள், வசனங்களும் அது தரும் உற்சாக உந்துதலும்தான் இரண்டரை மணி நேரத்தை இம்சையில்லாமல் நகர விடுகிறது. (இதில் சீமான் போர்ஷனை தயவு தாட்சண்யமில்லாமல் டெலிட் செய்துவிட்டால் மிச்சமெல்லாம் உற்சாகம்தான்)

மகளிர் அணியில் சற்றே பருத்த பெண்மணிக்கு ‘கும்கி’ என்று பெயர் வைக்கிறார் மணிவண்ணன். ‘ஏன்யா மணி? அதென்ன கும்கி?’ இது சத்யராஜ். ‘அது வந்துங்ணா… பழகாத சின்னஞ்சிறு யானைங்களை பக்குவமா பழக்கி கூட்டி வர்றதுதான் கும்கிங்ணா…’ மணிவண்ணனின் இந்த பதிலுக்கு தியேட்டர் காட்டும் ரீயாக்ஷனை பார்க்க வேண்டுமே!

முதல்வரின் அழுக்கு ஜட்டியை துவைப்பதற்கு ஒரு வாரிய தலைவரும், ஒரு பர்சனல் செகரட்ரியும் அடித்துக் கொள்வதை பார்த்தால் கண்ணே கலங்குகிறது. (சிரித்து சிரித்துதான்) சத்யராஜ் காலில் விழுந்து கிடக்கும் பொலிட்டீஷியன் எம்.எஸ்.பாஸ்கரை பார்த்துவிட்டு, ‘ஏனுங்ணா… நாய் வளர்கிறேன்னு சொல்லவே இல்ல’ என்பதும், ‘காலம் கெட்டுப்போச்சுங்ணா. வரவர நாய்க்கு கூட சொட்டை விழுது பார்த்திங்களா’ என்பதும் மணிவண்ணனின் போட்டு தாக்கல்ஸ்! இப்படி சுரீர் சுரீர் சுட்டெரிப்புகள்தான் படம் நெடுகிலும்.

‘பதினாலு எம்.எல்.ஏ வை வச்சுக்கிட்டா சட்டசபையில் இப்படி பேசுறே’ என்று சத்யராஜ் செய்யும் மிமிக்ரி யாரை பற்றி என்பது புரியாமலா இருப்பார்கள் மக்கள்? (நாக்கை துருத்தியபடியே ஆட்டோக்கள் என்ரியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது டைரக்டர் சார், ஜாக்ரதை)

ஒரு அரசியல் படத்திற்கு கிண்டல் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு முக்கியம் கவர்ச்சியும், குத்தாட்டமும். அதை செவ்வனே நிறைவேற்றி தருகிறார் வர்ஷா. இளநீர் வியாபாரியான இவரை அப்படியே தள்ளிக் கொண்டு வரும் மணிவண்ணன், அவருக்கு டிபார்ட்மென்ட் ஸ்டோரெல்லாம் வைத்துக் கொடுத்து வசதியானவராக்கி அதற்கப்புறம் அதே வர்ஷாவை சத்யராஜிடம் ஏமாந்துவிட்டு நிற்பது செம சுவாரஸ்யம். படத்தில் வரும் மற்ற இரு அழகிகளை சற்றே ஓரங்கட்டிவிட்டு கம்பீரமாக நிற்கிறது வர்ஷாவின் மிடுக்கு.

அந்த இரு அழகிகளில் ஒருவரான கோமல் ஷர்மாவுக்கு நல்ல கேரக்டர். இறைச்சி கடை வழியாக கூட போக விரும்பாதவரை அதே இறைச்சி கடையில் ஒதுங்க வைத்து ஒரு கொலையையும் கண்ணெதிரே பார்க்க வைக்கிறது சூழ்நிலை. இது கிளிசரின் கண்ணீரில்லை என்று நம்புகிற அளவுக்கு நடித்து வைத்திருக்கிறார் அவரும்.

எட்டு ஏக்கர் பதினாலு சென்ட் என்று சத்யராஜால் வர்ணிக்கப்படும் அந்த நடிகை மிருதுளா. கதையில் காட்டுவாசி பெண் என்பதால் இப்படி தேடி பிடித்தார்களோ, என்னவோ?

பொலிட்டீஷியன் சத்யராஜ் பொசுக் பொசுக்கென சிரிக்க வைக்கிறார். போலீஸ் அதிகாரியாக இன்னொரு சத்யராஜும் இருக்கிறார். இந்த கேரக்டருக்கு எதற்காக சத்யராஜே வேணுமாம்? ஒரு டெல்லி கணேஷ் போதுமானவராக இருந்திருப்பாரே?

சினிமாவையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணி ஒரு குழப்ப சிந்தனையிலேயே இருக்கிறார் சீமான். ஏதோ இந்த கதையை இவரேதான் வளைத்து ஓடிக்கப் போகிறார் என்று நினைத்தால் எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிவிட்டு ‘எஸ்கேப்’ ஆகிறார். சுத்த போர்…

ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசையை தனியாக ஒரு டிவிடியாக போட்டு ஒவ்வொரு இசைக் கல்லு£ரிக்கும் அனுப்பி வைக்கலாம். இப்படியெல்லாம் சீனுக்கு சம்பந்தமேயில்லாமல் ‘எதையாவது உருட்டப் ப்டாது…’ என்று புரிந்து கொள்வார்கள் அல்லவா? எப்படியோ, ‘மலை மேல’ என்ற பாடலில் மட்டும் வாங்கிய சம்பளத்திற்கு வேலை பார்த்திருக்கிறார்.

ஆதாம் ஏவாளே ஆப்பிளோட வந்து நின்னாலும் அரசியல்வாதிகள் பலருக்கு ‘பப்பிஷேமே’ கிடையாது. அந்த விஷயத்தை பளீரென சொல்லியிருக்கிற மணிவண்ணனை சோழர் பரம்பரையில் ஒரே ஒரு டைரக்டர் என்று புகழலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

Filed Under: சினி விமர்சனம்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English